திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் தாயை அவதூறாக பேசி தாக்கியுள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்தன்று வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த குணசேகரன், தாய் மற்றும் மனைவியை அவதூறாக பேசிவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் குணாவின் கழுத்தில் நகக்கீறல் இருந்ததாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் காமாட்சி மற்றும் சுலோச்சனாவை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. குணசேகரன் மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்ததால், மாமியார் மற்றும் மருமகள் இருவரும் அவர்களது உறவினரான திருநங்கை நித்யா மற்றும் விக்கியிடம் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் திரைப்படப் பாணியில் அவரை கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டி கொடுத்துள்ளனர். சம்பவத்தன்று குணசேகரன் உறங்கச் சென்ற பிறகு, விக்கி மற்றும் நித்தியாவுக்கு வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் துப்பட்டா கொண்டு குணாவின் கழுத்தை நெரித்து, பின் அவரது உடலில் வெற்று ஊசி நரம்பில் செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. இதனை மறைக்க மாமியார் மற்றும் மருமகள் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.