சென்னை to ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போது உள்ள போக்குவரத்து முறையில் இன்று (ஜன,.20) முதல் 23-ஆம் தேதி வரை 4 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் போரூர் மேம்பாலம் சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி போகக்கூடிய சர்வீஸ் சாலை மூடப்படவுள்ளது. ஆகவே குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியே பூந்தமல்லி நோக்கி போகும் வாகனங்கள் இடதுபுறம் திரும்ப முடியாது. இந்த வாகனங்கள் வலதுபுறம் திரும்பி கிண்டி மார்க்கமாக போகும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் யூடர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியே பூந்தமல்லி நோக்கி போகலாம்.

குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பால சந்திப்பு வழியாக பூந்தமல்லி நோக்கி போகும் மாநகர பேருந்துகள் குன்றத்தூர் மெயின் ரோடு பாய்கடை சந்திப்பில் இடது புறம் திரும்பி மாங்காடு சாலை வழியே பூந்தமல்லி செல்ல வேண்டும். குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி போகும் இருசக்கர வாகனங்கள் போரூர் சந்திப்புக்கு முன் குன்றத்தூர் மெயின் ரோடு மசூதி தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மசூதி தெரு வழியாக சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்ல வேண்டும். வட பழனி மார்க்கத்திலிருந்து ஆற்காடு சாலை வழியே வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை லட்சுமி நகர் 40 அடி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மவுண்ட்-பூந்தமல்லி சாலையை அடைந்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

அதன்பின் ஆற்காடு சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் போரூர் மேம்பாலம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி போகமுடியாது. ஆகவே வாகனங்கள் இடது புறம் திரும்பி கிண்டி நோக்கி போகும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் யூடர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியே செல்லலாம். வாகனங்கள் கிண்டி மார்க்கத்தில் இருந்து மவுண்ட்-பூந்தமல்லி சாலை வழியே வந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி போக இயலாது. ஆகவே இவ்வாகனங்கள் போரூர் மேம்பாலம் வழியே பூந்தமல்லி நோக்கி போகவேண்டும். பூந்தமல்லி மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியே வந்து யூடர்ன் எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கி போக இயலாது. இந்த வாகனங்கள் நேராக சர்வீஸ் சாலையில் வழியே மவுண்ட்-பூந்தமல்லி சாலை ராம கிருஷ்ணா சாலை சந்திப்பில் யூடர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக மீண்டுமாக பூந்தமல்லி நோக்கி போகவேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.