தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, நீண்ட காலமாகவே பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துக்களை கூறுகிறார். அவர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர் பதவியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இப்போது பதவி உயர்வு பெற்று தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். நடந்து முடிந்த 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உடன் சேர்ந்து 23 இடங்களில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 18 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணியில் அவர்கள் போட்டியிட்டனர்.

இதனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற இயலாது என்பதை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கிற அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது. தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பாஜகவில் அண்ணாமலை தலைவராக இருக்கிறார். ஒன்றிய அரசில் பாஜக இருப்பதால் பண பலத்தை கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடு தான் நடத்தப்பட்டது.

ஆனால் பாஜகவை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்தது கிடையாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களே உங்களது நாவை அடக்கி கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் வருகிற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்குக்கு உரிய பாடத்தை புகட்டி விடுவார்கள். நீங்களாகவே உங்களை திருத்திக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.