கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த நிகிதா(19), கிழக்கு தாம்பரத்திலுள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதனையடுத்து அவர் முதல் நாளான நேற்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகில் செல்போன் பேசியவாறு ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிகிதா மீது மோதியது. இதனால் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.