கோயம்புத்தூரில் வசிக்கும் 37 வயதுடைய பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது நான் கோவையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர் மூலம் வடவள்ளியைச் சேர்ந்த தொழிலதிபரான சந்தோஷ்குமார்(42) என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் கூறினார்.

இதனையடுத்து எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். சம்பவம் நடந்த அன்று சந்தோஷ் குமார் என்னை வடவள்ளியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வர சொன்னார். நான் அங்கு சென்றவுடன் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் தொழில் ரீதியான தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளாக என்னிடமிருந்து 35 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். அதில் 10 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து, பணத்தையும் கொடுக்காமல் இருக்கிறார். இது தொடர்பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.