ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தீபக் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். இதுகுறித்து தந்தை கேட்டபோது பள்ளிக்கு சென்று படிக்க வேண்டி இருக்கிறது என தீபக் கூறியுள்ளார்.

அதன்பிறகு அங்கிருந்து பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு ஏ பிரிவில் படிக்கும் தீபக் முதல் மாணவராக பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும் தனது புத்தகப் பையை வகுப்பறையில் வைத்து விட்டு சி பிரிவிற்கு சென்றார். இதனையடுத்து வகுப்பறை கதவுகளை பூட்டிவிட்டு தான் வீட்டில் இருந்து மறைத்து எடுத்து வந்த நைலான் கயிற்றை உத்திரத்தில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அடுத்தடுத்து பத்தாம் வகுப்பு சி பிரிவிற்கு சென்ற மாணவர்கள் தீபக் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அலறினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவnஇடத்திற்கு சென்று தீபக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சரியாக படிக்காமல் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த தீபக்கை பெற்றோரும், ஆசிரியர்களும் கண்டித்தனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத தீபக் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய்விட்டார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராமேஸ்வரத்தில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு தீபக்கை மீட்டனர். அதன் பிறகு தீபக் தற்கொலை செய்துள்ளார். படிப்பு வராததால் தீபக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.