சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கன்னடபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருப்பதற்காக காமேஷ் சடன் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் மழை நீர் கால்வாய்க்காக கட்டிய கான்கிரீட் சுவரில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லேசாக காயமடைந்த பிரதீஸ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ராஜின் பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அதனை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டு மாணவர்கள் மருந்து கடைக்கு செல்ல வேண்டும் என கூறி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி சென்று விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.