கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் கைகளாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி பெற்றோர்களை வரவழைத்தனர். இதனையடுத்து பெற்றோர் முன்னிலையில் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மாணவர்கள் மோதி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.