திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவில் பின்புறம் மலையை சுற்றி இருக்கும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற மாணவி உலக நன்மைக்காக இன்று காலை பரதநாட்டியம் ஆடியபடி 14 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றுள்ளார்.

முன்னதாக பவ்யஹாசினி அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு வழிபாடு செய்துவிட்டு தனது கிரிவலத்தை தொடங்கினார். அப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பரதநாட்டியம் ஆடியபடி மாணவி கிரிவலம் சென்றதை பொதுமக்கள் கண்டு ரசித்து பாராட்டியுள்ளனர். இதனையடுத்து கோவில் முன்பு மாணவி கிரிவலத்தை நிறைவு செய்துள்ளார்.