திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சதிகல் சிற்பங்கள் கண்டறிந்தனர். இது குறித்து இவர்கள் கூறியுள்ளதாவது, ஆரணி – வேலூர் சாலையில் சேவூர் கிராமத்தில் இருந்து முள்ளண்டிரம் என்ற கிராமத்திற்கு சாலை பிரியும் இடத்தில் பாலமுனீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் கருவறைச் சுவருக்கு அருகில், 2 நடுகற்கள் இருக்கிறது. இது சதிகல் எனப்படும்.  உடன்கட்டை ஏறியதன் நினைவாக இந்த கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்தை சேர்ந்தது.

இந்நிலையில் முதலாவது உள்ள சிற்பத்தில் வீரன் ஒருவன், உயர்ந்த ஒரு ஆசனத்தின்மீது இடதுகாலை மடக்கியும், வலதுகாலை கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்தபடி காட்டப்பட்டுள்ளது. பின் அவரின் இடது கையில் நீண்ட வாள் ஒன்றும், காதணி, இடுப்பில் அரையாடை போன்றவையும் காணப்படுகிறது. இந்த தோற்றத்தை வைத்து இவர் முக்கிய தளபதியாகவோ அல்லது  அமைச்சராகவோ இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வீரன் போன்ற சிற்பத்திற்கு அருகில் ஒரு பெண் நின்றபடி காணப்படுகிறார். இந்நிலையில் இப்பகுதிகளில் கண்டறியப்பட்ட நடுகற்களில் இதுபோன்ற சிற்பங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதனையடுத்து  உள்ள சிற்பத்தில் வலதுபுறத்தில் ஒரு வீரனும், அதற்கு இடதுபுறத்தில் ஒரு பெண் உருவமும் காணப்படுகிறது. பின்னர் வீரனின் வலது கையில் கீழ்நோக்கிய நீண்ட வாள்ஒன்றும், பின் தலையில் கொண்டை, காதணி, கழுத்தணி, தோள்வளை, முன்கைவளை, காலில் தண்டை, இடுப்பில் அரையாடை ஆகியவை காணப்படுகின்றன. இவ்வீரனுக்கு அருகில் உள்ள பெண்ணின் வலதுகை, வீரனின் இடதுகையைப் பற்றிக்கொண்டுள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்குரிய சிற்பங்கள் பாதுகாப்பட்டு, ஆரணியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகமும் தமிழக தொல்லியல் துறையும் இணைந்து செய்ய வேண்டும். இது வரலாற்றாய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.