தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில் 1 நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி 1 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து கோரிப்பாளையம் பகுதியில் துணை கமிஷனர்கள் ஆறுமுகச்சாமி, கவுதம் கோயல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி சிக்னலை நிறுத்தி அந்த வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதே போல் பெரியார் பேருந்து நிலையத்தில் தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் தலைமையில் உதவி கமிஷனர்கள் செல்வின், ரவீந்திரபிரசாத், இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், காசி, மாட்டுத்தாவணியில் வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் தலைமையில் உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், கீழவாசலில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தெப்பக்குளத்தில் இன்ஸ்பெக்டர் தங்கமணி என போலீசார் அனைவரும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.