வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் ஷாலு ஷம்மு என்ற ஷாம்லி. இவர் சென்னை புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி அன்று இவர் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து சூளைமேட்டிலுள்ள தன் தோழி வீட்டில் இரவு தங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்தபோது அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐபோன் தொலைந்து போய்விட்டது. அதன்பின் ஷாம்லி பட்டினப்பாக்கம் போலீசில் புகாரளித்து சி.எஸ்.ஆர் ரசீது பெற்றார். மேலும் ஷாம்லி நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கியிருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து பெயர் பட்டியலில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.