நடப்பு ஐபிஎல்  கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் 48.50 சராசரியுடன் 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட மொத்தம் 776 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக குவாலிஃபையர்-2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. எனினும், அந்தப் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ராஜஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்திருந்தாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியின் பரிசு வழங்கும் விழாவில், வைபவ் சூர்யவன்ஷிக்கு 5 முக்கிய விருதுகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி

1. சீசனின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வீரர் (Electric Super Striker of the Season):

இந்த சீசனில் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடி, 100 பந்துகளை எதிர்கொண்ட வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவருக்கு இந்த விருது வழங்கப்படும். வைபவ் சூர்யவன்ஷி நடப்பு சீசனில் 237.30 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஃபின் ஆலன் (214.11), பிரியான்ஷ் ஆர்யா (211.62), அபிஷேக் சர்மா (204.72) ஆகியோர் உள்ளனர். இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளில் யாரும் இவரை முந்த முடியாது என்பதால், இவருக்குப் பரிசாக ‘டாடா சியரா’ (Tata Sierra) கார் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

2. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்:

நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா (43 சிக்ஸர்கள்), ஆர்சிபி அணியின் ரஜத் படிதார் (41 சிக்ஸர்கள்) ஆகியோர் உள்ளனர். ரஜத் படிதாரால் இனி இவரை முந்த முடியாது என்பதால், அதிக சிக்ஸர் அடித்ததற்கான விருதும், ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் வைபவுக்குக் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

3. சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் (Emerging Player of the Season):

ஏப்ரல் 1, 2000-க்குப் பிறகு பிறந்து, சர்வதேச போட்டிகளில் விளையாடாத, முந்தைய சீசன்களில் 25 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடிய இளம் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பிரியான்ஷ் ஆர்யா, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷிக்கே இந்த விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

4. சீசனின் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player):

தற்போது புள்ளிப்பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 436.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 408 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ரபாடா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால், வைபவ் இந்த விருதையும், ரூ. 15 லட்சம் பரிசுத்தொகையையும் வெல்வார். கடந்த சீசனில் இந்த விருதை சூர்யகுமார் யாதவ் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஆரஞ்சு தொப்பி (Orange Cap):

அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பந்தயத்தில் 776 ரன்களுடன் வைபவ் தற்போது முதலிடத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் (722 ரன்கள்), சாய் சுதர்சன் (710 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சுப்மன் கில் மேலும் 55 ரன்களோ அல்லது சாய் சுதர்சன் 67 ரன்களோ எடுத்தால் மட்டுமே வைபவை முந்த முடியும். இல்லையெனில் ஆரஞ்சு தொப்பியும், ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் வைபவ் சூர்யவன்ஷி வசமாகும்.