தமிழக சட்டசபையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

அதன் பிறகு அனைத்து தலித் கிறிஸ்தவ மக்களும் ஒன்று சேர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை மிகப் பெரிய மாநாடாக நடக்க இருக்கிறோம் என்றும் கூறினார். அதன் பிறகு பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் ஆதாயங்களை பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என்று கூறினார். மேலும் தேவாலய பணியாளர்களுக்கு வாரியம் அமைத்து கிறிஸ்தவ மகளிர் சங்கங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்கு நன்றியும் தெரிவித்தார்.