தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தொழிலாளர்கள் வேலைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேரம் வேலை 3 நாட்கள் விடுமுறை என்பது அந்த சட்டத்தின் சரத்து. இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் வக்கனையாக பேசினார். இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற கூடாது என எனது அரசுக்கு கெடு விதித்தார்.

அன்று மு‌.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்து பார்க்க வேண்டும். தற்போதைய அரசின் முதல்வர் கொத்தடிமையாக மாறி தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக 12 மணி நேரம் வேலை மசோதாவை இயற்றியுள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றியதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தமிழகத் தொழிலாளர்களின் நலனைக்காக அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எச்சரித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.