டெல்லியில் உள்ள கால்காஜி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 52 வயது பெண் மற்றும் அவரது 32, 27 வயதுடைய இரண்டு மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பல மாதங்களாக மாதாந்திர வாடகையான ரூபாய் 25000 – த்தை குடும்பத்தினர் செலுத்தாததால், வீட்டை காலி செய்யுமாறு அறிவிப்புக் கொடுக்க வீட்டு உரிமையாளர் ஒரு நீதிமன்ற ஊழியர் மற்றும் உள்ளூர் போலீசாருடன் மதியம் 2.45 மணியளவில் வந்துள்ளார்.

அப்போது கதவைத் தட்டியும் பதில் வராததால், மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி இரண்டு மாடி குடியிருப்புக்குள் சென்றபோது, ஒரு அறையில் தாய் மற்றும் 2 மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டனர்.

ஒரு காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ஒன்றரை பக்க கடிதத்தை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில், குடும்பத்தினர் ‘நீண்ட காலமாக’ மனச்சோர்வுடன் போராடி வந்ததாகவும், வேலையின்றி இருந்ததால் வேலை செய்ய முடியவில்லை என்றும் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2024இல் குடும்பத் தலைவர் உயிரிழந்த பிறகு, குடும்பத்தின் நிலைமை மோசமடைந்ததாகவும், கடன் வாங்கியிருந்த அவர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்ததால் குடும்பம் கடனில் மூழ்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இரண்டு மகன்களும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.