சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொழிஞ்சிபாடி பகுதியில் தனது தாய் பெயரில் இருக்கும் 17 சென்ட் நிலத்தை பழனிவேல் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய முடிவு எடுத்தார்.

இதற்காக உடையாப்பட்டியில் இருக்கும் ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். அப்போது சார்பதிவாளர் செல்வ பாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோர் 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பத்திரப்பதிவு செய்து கொடுப்போம் என பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பாக பழனிவேல் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி பழனிவேல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புரோக்கர் கண்ணன் மற்றும் சார்பதிவாளர் செல்வ பாண்டியனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.