டி20 உலகக் கோப்பையில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு இப்போதே உலகமே வெயிட்டிங்! ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்திய அணி தான் ‘ஃபேவரைட்’ என சொல்லிக் கொண்டிருக்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இப்போது ஒரு ‘பகீர்’ கருத்தை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “டி20 கிரிக்கெட்டில் ஃபேவரைட் என்ற வார்த்தையை நான் நம்புவதே இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. பழைய சாதனையையும், வீரர்களின் ஃபார்மையும் வைத்து ஜெயிக்க முடியாது.
Rohit Sharma speaking about T20 cricket🎙️ pic.twitter.com/ZOcrQBKQep
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 11, 2026
குறிப்பிட்ட அந்த நாளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இல்லையென்றால் யாராக இருந்தாலும் தோற்றுவிட்டு வெறும் கையுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான்” என ரோஹித் அதிரடியாகக் கூறியுள்ளார்.
இந்திய அணி இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 8 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வலுவான புள்ளிவிவரங்களை வைத்து தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அசால்ட்டாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ரோஹித் இப்படி ஒரு ‘பஞ்ச்’ கொடுத்து எச்சரித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ‘ஹிட்மேன்’ கொடுத்த இந்த அட்வைஸை சூர்யா அண்ட் கோ சீரியஸாக எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
