ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த 50 பக்தர்களில் பல குழுவாக பிரிந்து தனுஷ்கோடி பகுதியை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது அந்த ஆட்டோவை வேர்க்கோடு பகுதியில் உள்ள ஓட்டுனர் மணிகண்டன் (25) என்பவர் ஓட்டியுள்ளார். இதனையடுத்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அந்த 6 பேரும் ஆட்டோவில் தனுஷ்கோடிக்கு சென்று விட்டு, ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

தனுஷ்கோடி சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மற்றொரு ஆட்டோ மீது வேகமாக மோதியதில், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த அசோக்டாங்கே (63) மற்றும் மங்களாபாய் (74) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த  4 பேரையும்  ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.