பெங்களூரு ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் இன்று குண்டுவெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் இன்று மதியம் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. ஒயிட்ஃபீல்டு (WhiteField) பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் முதலில் 4 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் அது சிலிண்டர் அல்லது பாய்லர் வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. எச்ஏஎல் காவல் நிலையத்திற்குட்பட்ட குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால், ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்களின்படி, ஓட்டலில் ஒரு பையில் வைத்திருந்த மர்ம பொருள் வெடித்ததாககூறப்பட்டது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் பலத்த காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். அதேபோல சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் விரைந்து வந்தனர். ஓட்டலைச் சுற்றியுள்ள பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஒயிட்ஃபீல்டு தீயணைப்பு நிலையத்தினர் கூறுகையில், “ராமேஸ்வரம் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இந்த குண்டு வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.பிற்பகல் 1 மணியளவில் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. தடயவியல் குழுவினர் பொருட்களை சேகரித்தனர். குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் சோதனைகளுக்குப் பிறகு கண்டறியப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்த பைக்குள் ஐஇடி (IED) கிடந்தது முதல்நிலை விசாரணையில் தெரியவந்தது.

உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்பதை உறுதி செய்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா. வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது என அவர் தெரிவித்தார். இந்த நிலையில் பெங்களூரு ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் இன்று குண்டுவெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. குண்டு வெடித்தது தொடர்ந்து உணவகத்தில் இருந்த மக்கள் சிதறி ஓடுவதை இந்த காட்சியில் காணலாம்..

https://twitter.com/MrSinha_/status/1763550639148470771