ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம். அவருடைய ஆட்சியில் விமான நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலானவற்றை கொண்டு வந்தார்.

இந்நிறுவனங்கள் வாயிலாக தற்போது எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் சந்திரபாபுவின் திட்டமே ஆகும். அரசியலில் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. அவர் நல்ல முதலமைச்சர். நடிகர் ரஜினிகாந்த தன் உரையில் எந்த கட்சியையும், தலைவரையும் விமர்சிக்கவில்லை. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடாவிட்டாலும், அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல” என்று அவர் கூறினார். ரஜினியை அடுத்து நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியிருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.