ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 14-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 24-ம் தேதி வரை ருத்ரன் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. படத்தின் இந்தி உள்ளிட்ட வட மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா எனும் நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூபாய்.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.

இதற்காக முன் பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக கூறப்படுகிறது. ரூ.10 கோடி செலுத்திய சூழலில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்துசெய்ததாக ரெவன்சா நிறுவனத்தின் சார்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ருத்ரன் படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.