புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளது.
அந்த வகையில், புதுச்சேரியில் இருந்து சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, துத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கப்போகிறது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர் சஃபா நிறுவனம், புதுச்சேரியில் இருந்து கோவை மற்றும் பெங்களூருவுக்கு வெள்ளிக்கிழமை சோதனை முறையில் விமானங்களை இயக்கி பார்த்துள்ளது. ஒரு பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.2,000 -ரூ.2,500 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் வரவேற்பை பொருத்து ஒரே வழித்தடத்தில் ஒன்றுக்கும் அதிகமான விமானங்கள் தினசரி இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.