நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பீகார் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை இன்று பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய சூர்யவன்ஷியை எப்படிக் கட்டுப்படுத்துவது எனப் பல அணிகள் திணறி வரும் நிலையில், இந்திய அணியின் நிதான ஆட்டக்காரர் செடேஷ்வர் புஜாரா ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
“அர்ஷ்தீப் சிங் இடது கை பந்துவீச்சாளர் என்பதால், சூர்யவன்ஷிக்கு ஓவர் தி விக்கெட்டில் பந்துவீசி, மிடில் மற்றும் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து பந்தை வெளியே ஸ்விங் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய புஜாரா, “மோசின் கான் இதே பாணியில் பந்துவீசித்தான் சூர்யவன்ஷியை அவுட் செய்தார். அர்ஷ்தீப் சிங் அதேபோல பேக் ஆஃப் லெந்த்தில் வீசி ஆஃப் ஸ்டம்ப் காரிடாரை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் 4-5 பந்துகளை ஸ்விங் செய்துவிட்டு, பின்னர் ஸ்லோயர் மற்றும் யார்க்கர்களைப் பயன்படுத்தினால் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எளிதாக எடுக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
இதுவரை 8 போட்டிகளில் 357 ரன்களை 235 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள சூர்யவன்ஷியை, அர்ஷ்தீப் சிங் இன்று வீழ்த்துவாரா என்பதுதான் முல்லான்பூர் மைதானத்தின் இன்றைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
