திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக ஜெயந்தி ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலம் ஜெயந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே ஜெயந்தி கோமா நிலைக்கு சென்றதால் அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்றிலிருந்து இன்று வரை ஜெயந்தி கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயந்தியின் தாய் குமாரி மாவட்ட ஆட்சியர் பா.முருகேசனிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது மகள் கோமா நிலைக்கு செல்வதற்கு ஆரணி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தான் காரணம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது மகளையும் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.