கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் ஸ்ரீராம்(3) பூதங்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். நேற்று மாலை நேரத்தில் ஸ்ரீராம் சிறுவர்களுடன் திரௌபதி அம்மன் கோவில்குளம் அருகே விளையாடி கொண்டிருந்தான்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஸ்ரீராம் இல்லை. இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் குளத்தில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். திடீரென குளத்தில் இருந்து முதலை வந்ததால் சிறுவனை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்கும் வலையை வீசி இரவு 11 மணி அளவில் சிறுவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவன் குளத்தில் தவறி விழுந்து இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.