கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து பரிசோதனை செய்த போது செரிமான அமைப்பிலிருந்து மார்பு குழிக்கு திரவ கொழுப்பை கொண்டு செல்லும் குழாய் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அலட்சியமாக இருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் பழனிச்சாமி கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கலையரசி, பார்த்திபன் ஆகியோர் கவன குறைவால் தவறான சிகிச்சை அளித்ததாகவும், பழனிச்சாமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.