சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் மூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவரது தம்பி பிரபாகரன்(27). இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த வீட்டில் போதுமான வசதிகள் இல்லாததால் திருமலை நகரில் புதிதாக வீடு பார்த்து அங்கு செல்ல இருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மணிகண்டனும், பிரபாகரனும் வீட்டில் இருந்து பொருட்களை மினி லாரியில் ஏற்றி கொண்டு புதிதாக பார்த்துள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அண்ணன், தம்பி இருவரையும் வழிமறித்து பணம் தருமாறு கேட்டு தகராறு செய்தனர். அதற்கு மணிகண்டன் பணம் தர மறுத்தார்.

அந்த மர்ம கும்பல் மணிகண்டனையும், பிரபாகரனையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரபாகரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ், ஹரிஹரன், அலெக்சாண்டர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.