கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் வ.உ.சி நகரில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான முனிராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லு பட்டியில் இருக்கிறார். இந்நிலையில் முனிராஜ் தனது நண்பர் லோகநாதரிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த மாதம் 22-ஆம் தேதி லோகநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டைக்கு வந்துள்ளார். அங்கு தக்காளி மார்க்கெட் அருகே வைத்து முனிராஜ் உள்பட சிலர் காரில் வந்து லோகநாதனை சந்தித்து அவரிடம் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டனர்.

ஆனால் கூறியபடி முனிராஜ் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கவில்லை. அவரது செல்போன் என்னும் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லோகநாதன் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முனிராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த சக்திவேல், தமிழரசன், ரெட்டி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.