சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் அருண்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல சைகை காட்டி குறும்பு செய்தனர்.
இதுகுறித்து அந்த பெண் அருண்குமாரிடம் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அருண்குமார் இருவரையும் தட்டி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி அருண்குமாரை மிரட்டியுள்ளனர். அந்த சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் கத்தியுடன் வாக்குவாதம் செய்த 2 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர்.
அதற்குள் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் தலைமறைவான தீபன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று அடி நீளமுள்ள இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.