கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் போக்குவரத்து போலீசார் டவுன்ஹால் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதனையடுத்து நவீன கருவி மூலம் சோதனை செய்ததில் இரண்டு டிரைவர்கள் குடிபோதையில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல 30 ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 500 முதல் 1500 ரூபாய் வரை போலீசார் அபராதம் விதித்தனர்.