கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி பிரியதர்ஷினி அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி சிலர், பிரியதர்ஷினியிடம் கோவையில் பிரபல ஹோட்டல் கிளையை தொடங்க அனுமதி வாங்கி தருகிறோம்.

எனவே முன் வைப்பு தொகையாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறினர். இதனை நம்பி அவர்கள் கேட்ட பணத்தை பிரியதர்ஷினி அனுப்பியுள்ளார். இதனையடுத்து இடம் தேர்வு செய்வதற்காக செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் பிரியதர்ஷினியிடமிருந்து 14 லட்சத்து 9 ஆயிரத்து 962 ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பிரியதர்ஷினி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.