கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

அப்போது பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிராம உதவியாளர் மாரியம்மாள்(44), சர்வேயர் பஞ்சநாதன்(50) ஆகியோர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா தருவோம் என தெரிவித்தனர். இதுகுறித்து செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரைப்படி ரசாயனம் தடாவிய ரூபாய் நோட்டுகளை செல்வகுமார் மாரியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாரியம்மாளையும், அங்கிருந்து பஞ்சநாதனையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரின் வீடுகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.