கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம் உம்பிலிக்கம்பட்டியில் இருக்கும் தனது தாய் அம்பிகாவின் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று காலை அம்பிகா தனது பேத்தியை குளிப்பாட்டிய பிறகு ஆடை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மதுமிதா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அம்பிகா அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் மதுமிதா தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த அம்பிகா அலறி சத்தம் போட்டார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை தண்ணீர் தொட்டியை விட்டு வெளியே தூக்கினர். அதற்குள் மதுமிதா பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பகுதியில் முருகன் கோவில் கட்டுமான பணிக்காக அந்த தொட்டி அமைக்கப்பட்டது. கட்டுமான பணி தற்போது கிடப்பில் போடப்பட்டதால் தண்ணீர் நிரம்பி தொட்டி திறந்தவெளியில் இருக்கிறது. அதில் தான் மதுமிதா மூழ்கி இறந்தார்.

இதனால் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.