எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம். எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. 75வது குடியரசு தினம், புதிய நாடாளுமன்ற கட்டிடம், செங்கோல் என அனைத்தும் மிக சுவாரசியமாக இருந்தது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையை என்றும் நினைவில் வைத்திருப்போம்.
இன்னும் பல ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கான வரிசையில் அமர்ந்திருக்கும். தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதால் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

பத்தாண்டில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவர் உரை பிரதிபலிக்கிறது. இளைஞர் பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேச உள்ளோம். நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. நீண்ட காலம் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் என விமர்சித்தார்.

மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிடவே துணிச்சல் இல்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள்
நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருக்கவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளின் விருப்பத்தை மக்கள் தேர்தல் மூலம் நிறைவேற்றுவார்கள். எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.
கூட்டணி கட்சிகளின் திறமைகளை காங்கிரஸ் வீணடிக்கிறது எனவும் விமர்சனம் செய்தார்.