விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவிந்தனுக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது. கன்றுக்குட்டி மட்டுமே கொட்டகையில் இருந்தது. இது தொடர்பாக கோவிந்தன் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் கோவிந்தன் தனது மனைவி சுபாஷினியுடன் கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அந்த கன்றுக்குட்டியின் கழுத்தில் “என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள் ஐயா” என்ற வாசகம் அடங்கிய அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் கோவிந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.