மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே உள்ள போர்சா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவரின் 7 வயது மகன் ரிஷப், தனது வீட்டின் உரிமையாளர் மகன்களுடன் விளையாடச் சென்றுள்ளான். அப்போது உரிமையாளரின் 14 வயது மகன், தனது தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.

எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி வெடித்ததில், குண்டு பாய்ந்து ரிஷப் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர், தனது துப்பாக்கியைப் பாதுகாப்பில்லாமல் வீட்டில் விட்டுச் சென்றதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் இது விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலை என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனிடையே துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், உரிமையாளரைக் கைது செய்து இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.