பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சர்ச் ஸ்ட்ரீட் (Church Street) பகுதியில், ஒரு சிறுமி கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை விற்பனை செய்துகொண்டே, தனது புத்தகங்களை விரித்து வைத்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபினவ் என்ற நபர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த இந்தப் புகைப்படத்தில், வறுமை வாட்டினாலும் கல்வியின் மீது அந்தச் சிறுமி காட்டும் ஆர்வம் காண்போரை வியக்க வைத்துள்ளது.

“வாழ்க்கை மிகவும் கடினமானது, நமக்குக் கிடைத்த கல்விக்காக நாம் எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும்” என அந்தப் புகைப்படத்திற்குப் பதிவிடப்பட்டுள்ள வாசகம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

சுமார் 19,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வைரல் பதிவு, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “அந்தச் சிறுமியின் அர்ப்பணிப்பு அளப்பரியது” என ஒரு தரப்பினர் பாராட்டினாலும், “குழந்தைகள் இப்படிப் போராடிப் படிக்க வேண்டிய நிலையில் சமூகம் இருப்பது வேதனை அளிக்கிறது” என மற்றொரு தரப்பினர் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“இப்படிப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான கல்வி வளங்களைச் சமூகம் தடையின்றி வழங்க வேண்டும்” என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வறுமைக்கும் போராட்டத்திற்கும் இடையிலும் அந்தச் சிறுமி காட்டும் தன்னம்பிக்கை, பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.