
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இது போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் வேலைக்கு சென்று வந்த மசூது என்பவரை மர்ம நபர்கள் வழிமறித்து கை, கால் மற்றும் முதுகில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இது குறித்து மசூதும், பாப்பாக்குடி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பாப்பாக்குடி காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து வீட்டின் முன்பு குண்டுகள் வீசிவிட்டு தப்பி ஓடி சென்றது போன்ற காட்சிகள் இருந்தன. இந்த காட்சிகளை வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.