ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசனிடம் மின் கம்பத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12-வது வார்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்ய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் வந்தார். அவரிடம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் பிரேமா சேகர் ஆகியோர் மீன் கம்பத்தை அகற்றுவது குறித்து கூறியுள்ளனர்.

அதன் பலனாக பிரகாஷ் எம்எல்ஏ மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி உயர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இந்நிலையில் மின் கம்பத்தை மாற்ற பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 1.30 லட்ச ரூபாய் பணம் மின்வாரியத்திற்கு கட்டணமாக செலுத்தப்பட்டது. நேற்று மின்வாரிய அதிகாரிகள் உயர் அழுத்த மின் கம்பத்தை மாற்றி மாற்று இடத்தில் அமைத்தனர்.