கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமையில் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த கம்மாபுரம் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து  தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.