ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், எதிர்காலத்தில் மக்கள் வேலைக்குச் செல்ல தேவை இருக்காது; அது வெறும் விருப்பத் தேர்வாக மட்டுமே மாறும் என்று தெரிவித்துள்ளார். ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தி வரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மிக வேகமாக முன்னேறி வருவதால், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கும் முன்னதாகவே மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை அவை செய்யத் தொடங்கிவிடும் என்று கணித்துள்ளார்.

இதனால், மக்கள் வேலை தேடுவதற்காகப் பெரிய நகரங்களில் வசிக்க வேண்டிய கட்டாயமும் இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்தியாவில் வேலைக் கலாச்சாரம் குறித்துத் தீவிர விவாதம் நடைபெற்று வரும் சூழலில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க், எதிர்காலத்தில் வேலை என்பது கட்டாயமில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் எல்&டி தலைமைச் செயல் அதிகாரி எஸ்.என். சுப்ரமணியன் போன்ற முக்கிய இந்திய வணிகத் தலைவர்கள் இதற்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் அல்லது 90 மணி நேரம் வரை மிக அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, சீனாவின் ‘9-9-6’ வேலை முறை (காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள் வேலை) அந்நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்றும், இந்திய இளைஞர்களும் அவ்வாறே அதிக உழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.