சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ராமாபுரம் அருகே சென்றது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிக்காக டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இரும்பு கம்பிகளை ராட்சத கிரேன் மூலம் தூக்கி பள்ளத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரும்பு கம்பிகளோடு கிரேன் சரிந்து பேருந்து மீது விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்கள், டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்த தர்மேந்திர குமார் என்பவர் 5 வருடம் அனுபவம் இருப்பது போல போலியான சான்றிதழ் தயாரித்து வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. அவரை பிரபல கட்டுமான நிறுவனத்தின் இன்ஜினியர்களான சிவானந்த, பொன் சந்திரசேகர் ஆகியோர் பணியில் சேர்த்து விட்டதும் தெரியவந்தது. இதனால் சிவானந்தா மற்றும் பொன் சந்திரசேகர் ஆகிய இருவர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.