ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது, கடலாடி அருகே உள்ள காணிக்கூர் மற்றும் எம்.கரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருத்தி விவசாயத்தை இந்த வருடம் பயிரிட்டோம். இந்நிலையில் முறையாக தண்ணீர் பாய்ச்சியும் இலைகருகல் நோய் ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன.

மேலும் இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், அவர்கள் அவற்றை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு ஏக்கர்க்கு 25 ஆயிரம் ரூபாய் செலவிட்டு வளர்த்தோம். ஆனால் பருத்தி செடிகளை பறிக்கும் தருவாயில் இருக்கும்போது, இலைகருகல் நோய் ஏற்பட்டு  கருகி உள்ளது. இதனை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த பருத்தி விளைந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி கிடைக்கும் நிலையில், இலைகருகல் நோய் ஏற்பட்டதால் அனைத்தும் வீணாகி விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயி முருகவேல் நேரில் வந்து மனு அளித்துள்ளார்.