நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்த நிலையில், அதை மீட்பதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் கிளம்பினார். இவர் தனியார் ஆம்னி பேருந்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார்.
அப்போது அந்த ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் ஒரு தனியார் ஓட்டல் முன், பயணிகள் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த ரூபனும், பணம் இருந்த பையை பஸ்சிலேயே வைத்து விட்டு இறங்கி டீ சாப்பிட சென்ற பின் மீண்டும் வந்து பேருந்தில் ஏறினார். அவர் பணம் வைத்திருந்த பையை பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போய் இருந்தது. இதையடுத்து மர்ம நபர் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் கயத்தாறு காவல் நிலையத்தில் ரூபன் அளித்த அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.