சூப்பர் 4ல் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

2023 ஆசியக் கோப்பை இன் குரூப்-ஸ்டேஜ்முடிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர்-4க்கு முன்னேறியுள்ளன. அதில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே  இன்று லாகூரில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த சூப்பர்-4 மெகா போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.  பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா ஆகியோர் மிரட்டினர். இதனால் வங்கதேசம் 38.4 ஓவர்களில் 193 ரன்களுக்குச் சரிந்தது.

ஹரிஸ் ரவூப் 4 மற்றும் நசீம் ஷா  3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை கட்டுப்படுத்தினர். அப்ரிடி, இப்திகார் அகமது, அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வங்கதேச பேட்ஸ்மேன்களில் முஷ்பிகர் ரஹிம் (64) அதிக ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் ஷகிப் அல்ஹாசன் (53) அதிகபட்சமாக ஆட்டமிழந்தார். மேலும் துவக்க வீரர் முகமது நைம் 20 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பக்கர் ஜமான் 20 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் இருவரும் பொறுப்போடு ஆடிய நிலையில், பாபர் அசாம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன் பின் வந்த முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

பின் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த இமாம் உல் ஹக் 84 பந்துகளில் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். முகமது ரிஸ்வான் 63 ரன்களுடனும், ஆகாஷ் சல்மான் 12 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. ஹரிஸ் ரவூப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் சூப்பர் 4ன் முதல் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றியோடு ஆரம்பித்துள்ளது.