முதல் ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது..

2023 ஆசியக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இருப்பினும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. வேகப்பந்து வீச்சாளர்களான ஹாரிஸ் ரவுப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தானின் ரன்களைக் குறைத்தனர். பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சுக்கு முன்னால், எதிரணி அணி வெறும் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பேட்டிங் :

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாபர் அசாம் அணி 47.1 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தானின் சுழலுக்கு எதிராக இமாம்-உல்-ஹக்கைத் தவிர பாகிஸ்தான் வீரர்கள் யாரும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் தரப்பில் இமாம் அதிகபட்சமாக 61 ரன்களும், ஷதாப் கான் 39 ரன்களும் எடுத்தனர். இது தவிர பாபர் ஆசாம் (0), ஃபகார் ஜமான் (2), முகமது ரிஸ்வான் (21), சல்மான் அலி ஆகா (7), இப்திகார் அகமது (30), உசாமா மிர் (2), ஷாஹீன் அப்ரிடி (2), ஹாரிஸ் ரவுஃப் (1) மற்றும் நசீம் ஷா ஆட்டமிழக்காமல் (18) அடித்தார்.

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை தங்கள் வலையில் சிக்க வைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். முஜீப் உர் ரஹ்மான் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இது தவிர, ஃபசல் ஹக் ஃபரூக் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங் :

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் பாதி அணியை கூடாரத்திற்குள் அனுப்பியதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு பெரிய அடி கொடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் அரவூப் திகபட்சமாக (5) விக்கெட்டுகளையும், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதுதவிர நசீம் ஷா (1), ஷதாப் கான் (1) விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவரில் 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போட்டியை நடத்தும் அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 20 ரன்களை எட்டவில்லை என்பதுதான் சிறப்பு. தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக (18), 5 பேட்ஸ்மேன்கள் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாமல் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டி வரலாற்றில் ஆப்கானிஸ்தானை 59 ரன்களுக்கு சுருட்டி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1986 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நியூசிலாந்து அணியை 64 ரன்களுக்கு சுருட்டியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்துள்ளது.

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் குறைந்த ரன்களுக்கு சுருட்டிய அணிகள் விவரம் :

ஆப்கானிஸ்தான் – 59 ரன்கள் (இடம் – இலங்கையின் அம்பாந்தோட்டை) – 2023

நியூசிலாந்து – 64 ரன்கள் (இடம் – ஷார்ஜா)- 1986

ஜிம்பாப்வே – 67 ரன்கள் (இடம் – ஜிம்பாப்வேயின் புலவாயோ)- 2018

நியூசிலாந்து – 74 ரன்கள் (இடம் – ஷார்ஜா)- 1990

இலங்கை – 78 ரன்கள் (இடம் ஷார்ஜா)- 2002