ஐபோன் 12 போன்ற விலையுயர்ந்த பொருட்களை இலவசமாக தருவதாக கூறி பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் பண மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லாம் நவீன மயமான இவ்வுலகில் மோசடிகளும் நவீனமாகிவிட்டன. பெரும்பாலான பண மோசடிகள் ஆன்லைன் வாயிலாகவே தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இதர லைஃப் ஸ்டைல் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அதன்படி,

குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலியில் ரூபாய் 4500 க்கு மேல் ஏதேனும் பொருட்களை வாங்கினால் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி, ஆப்பிள் ஐபோன் 12, லெனோவா லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்களில் ஏதேனும் ஒன்று இலவசமாக தருவதாகவும், இந்த ஆஃபர் உங்களுடைய மாவட்டத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நீங்களும் ஒருவர் என கூறும் அந்த நபர்,

இதில் எந்த பொருளை நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள் என கேட்டவுடனே உங்களுடைய வங்கி கணக்கு தொடர்பான தகவல்களையும், அதை கூறிய பின் வரக்கூடிய OTP-யும் சொல்லுமாறு வற்புறுத்திகிறார்கள். அதை சொல்ல மறுக்கும் பட்சத்தில் இந்த ஆஃபர் உங்கள் கையை விட்டு செல்ல போகிறது என நம்மை  ஏக்கம் அடைய செய்யும் விதமாக பேசுகிறார்கள்.

இந்த மோசடி வளையில் சிக்கியவர்கள் தங்களது பணத்தை இழக்கிறார்கள். இதில் சிக்காத ஒரு நபர் நீங்கள் கூறிய தகவலை வாட்ஸப்பில் அனுப்புமாறு மோசடிக்காரர்களிடம் தெரிவிக்க, அவர்களும் அனுப்ப அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பவே, அந்நிறுவனம் எங்கள் தரப்பில் அப்படி ஏதும் ஆஃபர் இல்லை. எங்கள் நிறுவனம் இதுபோன்று ஓடிபி கேட்பதில்லை இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது.

பின் சில நிமிடங்களிலேயே அனுப்பிய குறுஞ்செய்தியை மோசடிக்காரர்கள் delete  for  every one  என்ற வசதி மூலம் டெலிட் செய்துள்ளனர். பொதுவாக மனிதர்களிடையே இருக்கும் பேராசையை பயன்படுத்தி  இவ்வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும், சிறிது நேரம்  ஆசையை கட்டுப்படுத்தி யோசித்து செயல்பட்டாலே இவ்வகையான மோசடியிலிருந்து தப்பிக்கலாம்.