ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீருக்கு சென்ற இவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாக்குதலுக்குப் பின் உயிரிழந்த கணவரின் அருகே அவருடைய மனைவி அமர்ந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலான நிலையில் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து வினயின் மனைவி ஹிமான்ஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “எனது கணவரும் பாதுகாப்பு வீரர் தான். அவர் நாட்டு மக்களுக்காகவும், தன்னுடைய நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் விரும்பினார்.

பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வும் இல்லாத நாடாக நம் நாடு இருக்க வேண்டும் என்று எண்ணினார். அவரது மரணத்திற்கு நீதி அளிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடத்திய இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் தொடக்கமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும். இத்துடன் இதனை முடித்துக் கொள்ள கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.