
சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது சஜித் என்பவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10.75 லட்சம் பணமும், சித்ரா என்பவர் வங்கி கணக்கிலிருந்து ரூ. 3 லட்சம் பணமும் ஒரே வங்கி கணக்கிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வங்கி கணக்கினை ஆய்வு செய்த போது அது வெள்ளையம்பட்டு பகுதியில் வசித்து வரும் கலையரசன் என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கலையரசனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு நபர் வங்கியில் லோன் எடுத்து தருவதாக கூறி தனது பெயரில் வங்கி கணக்கு திறக்கும்படி கூறினார். அவர் மேற்கொண்டு பணம் தருவதாக கூறியதால் திறக்கப்பட்டது தான் இந்த வங்கி கணக்கு என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்காக கலையரசன் வங்கி கணக்கை திறந்து கொடுத்த காரணத்தினால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரை வைத்து ஆன்லைன் மோசடி செய்த முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.